இளைமையான சிட்னி பொங்கு தமிழ்


நிகழ்வில் என் அனுபவம்:



படம்: புதினம்

ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் "பொங்கு தமிழ்" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே!

நிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக 11 மணியளவில், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகக்கொடியை ஏற்றிவதற்கு ஈழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தொடர்ந்து ஒஸ்திரேலியா நாட்டு கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மக்கள் கூட்டம் சற்றே குறைவாக காணப்பட்டது. நேரம்தவறாமை என்பது எத்தனை முக்கியம் என்று ஒரு உரை ஆற்றினால் என்ன என எனக்கு தோன்றியது. ஆனால் 12 மணியளவில் மைதானத்தில் 2500 - 3000 வரையிலான மக்கள் உணர்ச்சியுடன் "சூரியத்தேவன் பிரபாகரன்" என கூறிக்கொண்டிருந்தனர். அதை பார்த்தவுடன் என்னுடைய "நேரம் தவறாமை உரை" வேறொரு நாளில் அரங்கேறட்டும் என விட்டுவிட்டேன்.

மைதானத்தில் ஒரு சிறிய மேடை அமைத்து, அதில் இளைஞர் படை தம் கடமையை தவறாது செய்தார்கள். உற்சாகத்துடன் தங்கள் குரல்கள் தொலையும் வரை ஈழம் வேண்டி சத்தம் போட்ட பல இளைஞர்களும், சிறுவர்களும் ஒஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்தவர்கள் / சிறுவயது முதல் ஒஸ்திரேலியாவில் இருப்பவர்கள். புலத்து இளைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு விடயங்களோடு வாழ்பவர்கள் அல்ல என ஆணித்தரமாக கூற கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகவே பயன்படுத்தியிருந்தார்கள் என்றே கூற வேண்டும்.

நிகழ்ச்சியில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோகி ஆகியோரின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது. இளைஞர்களின் பொங்குதமிழ் நடனமும் மகிந்தவின் கள்ளநரித்தனத்தை எடுத்துக்காட்டும் நாடகமும் சிறப்பம்சமாக அமைந்தன.

ஆரம்பத்தில் இளைஞர்கள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது, இறுதி நேரத்தில் பெரியவர்கள் குரல்களும் சேர்ந்து கொண்டன. ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்திருக்கலாமோ என எனக்கு தோன்றியது. அனைவரும் சேர்ந்து முழங்கிய போது உடம்பில் ஒரு உணர்ச்சி எங்கும் பாய்ந்தது.

தேசியத்தலைவரின் படம், தமிழீழ வரைபடம், பாயும் புலிப்படம் பதித்த பதாகைகளை மக்கள் தாங்கியபடி "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்" என கேட்ட போது, அங்கிருந்த ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த பெரிய பானை பொங்கியது மிகவும் அழகாகவும், உணர்ச்சியை அதிகப்படுத்தும் ஒரு ஊண்டு கோலாகவும் இருந்தது.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியான தாயக நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். முன்னர் வந்த மக்களை விட இப்போது அதிக மக்கள் வருகின்றார்கள். சிட்னியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் தாயக நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. எப்போதும் வராத பலர் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

நிகழ்வில் இறுதியில் பொங்குதமிழ் பிரகடனம் செய்த போது, மக்கள் அனைவரும் வலது கையை நெஞ்சில் வைத்து நின்ற போது, நெஞ்சில் வீரம் சற்றே அதிகமாகி தான் போனது. ஈழப்போராட்டத்தில் எம்முடைய பங்கும் உள்ளது, எம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள பலருக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

காலை 11 இல் இருந்து மதியம் 2 மணிவரை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு 3.30 வரை சென்றது. இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். பொங்குதமிழ் பாடல்கள் பாடும் போது தலைவர் பெயர் வரும் போதெல்லாம் மைதானத்தில் குரல்கள் அதிகமாகவும், பலமாகவும் ஒலித்தது.

கொடியிறக்கத்துடன், "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என அனைவரும் கூற நிகழ்வு நிறைவு பெற்றது. எண்ணிக்கையில் நாம் குறைந்தாலும், உணர்வில் குறைந்தவர்கள் இல்லை என சிட்னி தமிழர்கள் மீண்டும் திடமாக நிரூபித்திருந்தனர்.

அதென்ன "இளைமையான" சிட்னி பொங்குதமிழ் என கேட்பவர்களுக்கு: இளைஞர்கள் அதிகம் பங்கெடுத்தமையால் தான் இந்த தலைப்பு.

தூயா

9 comments:

ஆயில்யன்said...

வானொலி நிகழ்வுகளின் மூலம் சிட்னி பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் தெரிந்து கொண்ட எனக்கு, தங்களின் நேரடி அனுபவத்தில்,ஒன்று கூடிய புலம் பெயர்ந்த உறவுகளின் ஆதரவு, ஈழத்தில் போராடும் உறவுகளுக்கு கண்டிப்பாய் ஒரு நல்ல உற்சாகத்தை கொடுக்கும்!

ஜோசப் பால்ராஜ்said...

உங்கள் பதிவுகள் மூலம் ஈழத்திற்கு எங்களை அழைத்து செல்வதுபோல், இப்போதும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளீர்கள்.

//"இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். "//.

பிரபாகரன் என்பது ஒரு பெயர் மட்டும் அல்ல. தமிழினத்தை காக்கும் ஒரு மந்திரம் அது.
சிட்னியில் 2500 தமிழர்கள் மட்டும்தானா இருக்கின்றார்கள்?

கானா பிரபாsaid...

//சிட்னியில் 2500 தமிழர்கள் மட்டும்தானா இருக்கின்றார்கள்?//

நியாயமான கேள்வி, புலம்பெயர்ந்து விட்டோம் இனி அவர்கள் பாடு என்று நினைக்கும் கூட்டம் தான் வராமல் இருந்தவர்கள்,
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.

isooryasaid...

thooya can you contact me :)

your ezha nanpan
isoorya

Jeevansaid...

Nice account on the PonguTamil.

செந்தழல் ரவிsaid...

வாழ்த்துக்கள் சகோதரி...!!!

King...said...

///உற்சாகத்துடன் தங்கள் குரல்கள் தொலையும் வரை ஈழம் வேண்டி சத்தம் போட்ட பல இளைஞர்களும், சிறுவர்களும் ஒஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்தவர்கள் / சிறுவயது முதல் ஒஸ்திரேலியாவில் இருப்பவர்கள். புலத்து இளைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு விடயங்களோடு வாழ்பவர்கள் அல்ல என ஆணித்தரமாக கூற கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகவே பயன்படுத்தியிருந்தார்கள் என்றே கூற வேண்டும்///

:)

King...said...

//"இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். "//


:)

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....

King...said...

//"இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் "ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் "பிரபாகரன்" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். "//


:)

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே....