பேரன்ட்ஸ் க்ளப் அங்கத்தவர்களுக்காக - பகுதி 2




உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள்.

குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப வேண்டியிருக்கும்.
தூக்கத்திலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவது என்பது யாருக்குமே குழப்பமான ஒரு தருணம்தான். குழந்தைகளுக்கு எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. இந்தத் தருணம் குழந்தைகளுக்கு நாளெல்லாம் மனதில் நிற்கும் வகையில் பெற்றோர்கள் அவர்களிடம் மிகவும் பாசத்தோடு, இரக்கத்தோடு, பரிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

எப்படி எழுப்பலாம்...

குழந்தையை எப்போதும் ஒருவரே எழுப்பாதீர்கள். ஒரு நாள் அம்மா எழுப்பட்டும், அடுத்த நாள் அப்பா எழுப்பலாம். இப்படி மாற்றவில்லை என்றால் குழந்தை ஒரு ஆளுக்குப் பழகிவிடுவாள்.

குழந்தை தூங்கிவிட்டுக் கண்ணைத் திறந்ததும் அவளுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஒரு தனி இடம் உண்டு என்பதையும் அவள் இடத்தை உலகில் வேறு எதுவுமே நிரப்ப முடியாதது என்பதையும் அவளிடம் காட்டுங்கள். "நீதான் எங்கள் பொக்கிஷம், உன்னைப் பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், இந்த சமூகத்தில் எங்களுக்குப் பெற்றோர் என்ற அந்தஸ்து கிடைக்கச் செய்தது நீதான்" என்று அவளிடம் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
குழந்தை நாள் முழுதும் என்னென்ன நல்ல விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள். உதாரணமாக, "இன்றைக்கு உன் டீச்சர் உன்னைப் பார்ப்பதற்காகக் காத்திருப்பார் (உன்னை என்பதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் பெயரைச் சொல்லுங்கள்). நீ நல்ல தோழியாக இருப்பதால் உன் தோழி உன்னோடு கைகோர்த்துக்கொள்வாள். உனக்குப் புதிய தோழர்கள், தோழிகள் கிடைப்பார்கள், நீ ஜாலியாக வீட்டுக்கு வருவாய்" என்று சொல்லலாம். உணர்ச்சிபூர்வமான விஷயங்களைச் சொல்லுங்கள்; பொம்மை, சாக்லேட், பிஸ்கட் என்று பரிசுப் பொருட்களை எதிர்பார்க்க வைக்க வேண்டாம்.

முடிந்தால் உங்கள் குழந்தையின் பெயரை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ஒரு கதை சொல்லுங்கள். இந்தக் கதையில் பள்ளிக்கூடத்தை ஒரு அன்பான இடமான விவரிக்கலாம்.

தாமதிக்காமல் குழந்தையைக் குளிப்பாட்ட பாத்ரூமுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லுங்கள்.

குழந்தை தன் குடும்பத்தைத் தவிர வேறு சூழலில் இருப்பதை விரும்ப வேண்டும். இந்த வளர்ச்சி 2-5 வயதுக் காலத்தில் ஏற்பட வேண்டும்.

எப்படி எழுப்பக் கூடாது...

குழந்தையை எழுப்ப சமையலறையிலிருந்து அவள் பெயரைச் சொல்லிக் கத்தாதீர்கள்.

காலையிலேயே அவளை நாயே பேயே முண்டம் என்றெல்லாம் திட்டாதீர்கள். அதற்குப் பிறகும்தான் குழந்தையை அடித்து எழுப்பாதீர்கள்.

தினமும் காலையில் குழந்தைகள்தான் பெரிய ரோதனை என்றெல்லாம வசனம் பேசாதீர்கள்.

பள்ளிக்குச் செல்லத் தாமதம் ஆனால் தண்டனை காத்திருக்கிறது என்று குழந்தையிடம் சொல்லாதீர்கள். பிறகு குழந்தை பள்ளிக்கூடத்தை பூதங்கள் நடமாடும் இடம் போலப் பார்க்க ஆரம்பித்துவிடுவாள்.

குழந்தைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை என்றால் அவளை வலுக்கட்டாயமாக அனுப்பாதீர்கள். அவளுடன் கொஞ்சம் பேசி அவள் எதனால் பள்ளிக்குப் போக விரும்பவில்லை என்று கண்டுபிடியுங்கள்.

குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாதபோது ஸ்கூலுக்கு அனுப்பாதீர்கள். உடல் குணமாக அவளுக்கு ஓய்வு தேவை. அதே சமயம் அவளால் மற்ற குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படைய நாம் அனுமதிக்க முடியாது.

காலையில் குழந்தையை எழுப்புவது ஒரு கலை. பயிற்சியால் அதை நமக்குக் கைவந்த கலையாக்கிக்கொள்ளலாம். அதிகாலையில் நம் அன்புக் குழந்தை நம்மை ஒரு புன்னகையுடன் கட்டிக்கொள்வது மிகவும் சந்தோஷமான ஒரு அனுபவம். நாம் நாள் முழுதும் உற்சாகமாக இருப்பதற்குக் காலை நேரத்தில் நம் குழந்தைகளுக்குச் சிறிது நேரத்தை ஒதுக்கினால் போதும்.

தோழி.கொம்

5 comments:

வந்தியத்தேவன்said...

இதனை எனது அம்மாவிற்க்கு பார்வேட் செய்கின்றேன்.

Thooyasaid...

பெரிய பங்கு, அம்மா என்ன சொன்னார்கள்? ;)

Jeevansaid...

வருங்காலத்தில் நிங்கள் ஒரு சிறந்த தாயாக உங்கள்
குழந்தைக்கு இருபிற்கள் என்பதை மறுக்கமுடியாது! மிக அழகான பதிவு:)

தயாsaid...

நல்லதொரு பதிவு

Thooyasaid...

ஜீவ்ஸ், உங்க அம்மா எத்தனை அழகானவர் என்பதும் எனக்கு நன்றாக தெரியுமே :)