நானும் என் ஈழமும் 14: என் பதுங்குகுழி அனுபவம்





நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கின்றது.

இது நடந்து இன்றிலிருந்து 13 வருடங்கள் இருக்கும். அன்றைய வருடமும், வழமை போல் வருடத்தின் இறுதியில் அப்பாவும், நானும் தாயகத்தை நோக்கி செல்கின்றோம். இந்த முறை பயணத்திற்கான காரணம் என் அப்பாச்சிக்கு நடக்கவிருந்த சத்திரசிகிச்சை. கண்ணில் சிறு கோளாறு, எம்மிடத்தில் தான் மருத்துவத்திற்கு தேவையானவை இருப்பதில்லையே. அப்பாச்சியை சென்னைக்கு கொண்டு சென்று சத்திரசிகிச்சை செய்வதாக ஏற்பாடு. அப்பாவோடு நானும் [வழமைபோல்] 'நானும் வருவேன்' என அடம்பிடித்து தொத்திக்கொண்டு சென்றேன். போகாமலேயே இருந்திருக்கலாம் என சில நாட்களிலேயே நினைத்து கொண்டேன். அப்பப்ப பெரியவங்க பேச்சை கேட்டால் தப்பில்லை என தோன்றியது.

'யேய்ய்ய்ய்ய்' ஒரு மாதிரி அப்பாச்சி வீட்டிற்கு வந்தாகிற்று, இனி போகும் போது தான் அப்பா வேண்டும். அதுவரை எனக்கு எத்தனை வேலைகள், எத்தனை பேரை சந்திக்க வேண்டும். போன தடவை பக்கத்து வீட்டு அக்காவோடு சேர்ந்து பாண்டிகுண்டு விளையாடிய போது, அது போலவே எனக்கும் வேண்டும் என கேட்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார்கள். அதை போய் பார்க்க வேண்டும். இதையெல்லாம் விட்டு விட்டு அப்பா பின்னாடி சுத்த முடியுமா!

அடுத்த நாள் காலையில் சின்ன அப்பப்பா, அப்பாச்சியை பார்ப்பதற்கு பெரியண்ணாவுடன் துவிச்சக்கர வண்டியில் சென்றோம். போகும் வழியில் அண்ணனின் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். என் பேச்சை கேட்பதில் அத்தனை ஆர்வம். 'அரையடி வளரவில்லை, ஆனால் பேச்சு மட்டும்..' என சொல்லி வானத்தை பார்ப்பார்கள். எங்கள் ஊர் சந்தியடியில் போய் கொண்டிருக்கும் போது ஹெலி சத்தம் கேட்க ஆரம்பித்தது.

"அது தானே பார்த்தேன் என்னடா எங்க வீட்டு மகாராணியை வரவேற்க சந்திரிக்கா இன்னும் ஹெலி அனுப்பவில்லை என!" என என்னை தூக்கியபடி பெரியண்ணா துவிச்சக்கர வண்டியில் இருந்து குதித்துவிட்டார். என்னை மண்ணில் படுக்க வைத்து எனக்கு பாதுகாப்பாக அண்ணனும், நண்பர்களும் என்னை சுற்றி நிலத்தோடு.. மெதுவாக தலையை தூக்கி பார்க்கின்றேன்: நாங்க நிலத்தில், ஆனால் எங்க துவிச்சக்கர வண்டிகள் மட்டும் வந்த வேகத்திற்கு போய் ஒன்றோடு ஒன்று மோதி விழுகின்றன. ஹெலியின் சத்தம் அதிகமாகி கொண்டேயிருக்கின்றது.

"டேய் மச்சான் இங்க தானடா வாறாங்கள். இப்படியே ஓடி கல்விமன்ற பங்கருக்குள்ள போவம்" இது பெரியண்ணாவின் நண்பர்களில் ஒருவர்; பெயர் ரூபன். பின்னாளில் ஒரு தடவை என் காலை அவர் துவிச்சக்கர வண்டி சக்கரத்தில் நான் தவறுதலாக வைத்து, காலில் காயம் வந்து; அவருக்கு திட்டு வாங்கி கொடுத்த பெருமை எனக்குண்டு.

ரூபன் அண்ணாவின் யோசனைக்கேற்ப வீதியோர மதிலோடு என்னை மறைத்தபடி பக்கத்திலிருந்த கல்விமன்ற பங்கருக்குள் கொண்டு போகும் போது ஹெலி வந்து குண்டுகளை ஏவ ஆரம்பித்துவிட்டான். ஹெலி அப்படி "விட்டான்" ஆகும் என கேட்க கூடாது. ஊரில் 'பொம்பர் வாறான்', ' ஹெலி அடிக்கிறான்' என உயர்தினையாக தான் பேசுவார்கள். அவற்றால் கிடைக்கும் வலி பெரிதென்பதாலோ!

அண்ணன்கள் இறுதியில் என்னை தூக்கி கொண்டே பங்கருக்குள் ஓடி விட்டார்கள். எங்கள் ஊர் சந்தியில் எப்போதுமே சன நடமாட்டம் அதிகமாக இருக்கும். சந்திக்கு அருகிலேயே ஒரு பாடசாலை, சந்தை, கடைகள், தந்தி அலுவலகம் போன்றவை இருந்தது தான் காரணம். அது ஹெலியில் வந்தவர்களுக்கும் தெரிந்திருக்கும் போல, நாங்கள் நின்ற இடத்திலேயே சுற்றி சுற்றி குண்டுகளை வீச தொடங்கிவிட்டார்கள்.

நாங்கள் பாதுகாப்பாக பங்கருக்குள் போய்விட்டோம். ஆனால் பங்கருக்குள் தான் இடமே இல்லை. பதினைந்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் இருபத்தியைந்து பேர் இருந்தால் எப்படி முடியும்? அண்ணன்கள் பங்கர் வாசலிலேயே நிற்க, என்னை மட்டும் பங்கருக்குள்ளே தூக்கி குடுத்துவிட்டார்கள். வெளியே பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என்பது பங்கருக்குள் இருந்தவர்கள் பேசி கொண்டதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.அதற்கு மேல் யோசிக்க யாருக்கு தான் திரணி இருந்திருக்கும்.

பங்கர் என அழைக்கப்படும் பதுங்கு குழிகள் பக்கத்தில் குண்டுகள் விழும் போது ஓரளவு காப்பாற்றும். பங்கருக்கு மிக அருகிலேயோ அல்லது பங்கருக்கு மேலேயோ விழும் பட்சத்தில் கூண்டோடு கைலாசம் தான். அந்த பயம் பங்கருக்குள் இருக்கும் ஒவ்வொருத்தருக்கும் நிச்சயம் இருக்கும்.

மத்தவங்களுக்கு என்ன பயம் இருந்திருக்கும் என தெரியவில்லை. எனக்கு பல பயம். ஹெலிக்கு பயம், குண்டுக்கு பயம், இரத்தம் கண்டால் பயம், காயம் பயம், பங்கர் பயம், பங்கர் இருட்டு பயம், பங்கரில் இருக்கும் பாம்பு, பூரான் பயம், அத்தனை பேரும் நெருக்கி இருந்து கொண்டு அழுவதை பார்த்தால் பயம், வியர்வை பயம், வெளியே கேட்கும் கூக்குரல்கள் பயம், வாசலில் பாதுகாப்பில்லாம் இருக்கும் அண்ணன்களை நினைத்து பயம்..

இத்தனை பயம் இருந்தாலும் என்ன தான் செய்ய முடியும்! 'பெரியண்ணா' என கூப்பிட்டு பார்க்கிறேன்.காத்து மட்டும் தான் வருது. சத்தமே வரலை. என் குரலுக்கு என்ன ஆகிவிட்டது என்ற புது கவலை வேறு..ஆனால் அதை பற்றி சிந்திக்க விடாது வெளியே சில பெண்குரல்கள் கதறும் ஓசை.

'அய்யோ இப்ப ஏன் வாறிங்கள். மரத்துக்கு கீழயே நில்லுங்கோ' என எங்கள் பங்கருக்குள் இருந்தவர்களை சொன்னதை கேட்காமல் பங்கரை நோக்கி வந்த சில பாடசாலை பெண்களை தான் ஹெலி சுட்டிருந்தான். ஐந்து பேரில் நால்வருக்கு காயம். 'இப்படியே விட்டால் அவன் பார்த்து பார்த்து சுடுவான். பங்கருக்குள்ள இழுங்கோ' என யாரோ சொன்ன யோசனையின் படி காயம்பட்டவர்களை எங்கள் பங்கருக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பங்கருக்குள் இருந்த ஆண்கள் வாசல் பக்கம் போக பெண்களுக்கு உள்ளே இடம் தரப்பட்டது.

இப்போது என் அருகிலேயெ அந்த ஐவரும். கண்ணை மூடிக்கொண்டிருந்த நான், அவர்கள் கதறும் சத்தத்தால் திறந்து பார்த்தேன். ஏன் பார்த்தேன் என இப்போதும் வருந்தும் படி அவர்கள் கோலம் இருந்தது. ஒரு அக்காவுக்கு முகம் முழுதும் இரத்தம், ஒரு அக்காவின் கை அறுந்து தொங்கி கொண்டிருந்தது, ஒரு அக்கா மயங்கிட்டா [மயங்கி என நான் நினைத்து பக்கத்திலிருந்தது இறந்த ஒருவர் என பின்பு தெரிய வந்தது], ஒரு அக்கா ஏன் கத்துறா என்றே தெரியவில்லை..

நான் இருந்த இடத்தில் ஈரமாக உணர ஆரம்பித்தேன். கையால் தொட்டு பார்த்தால்..இரத்தம்...'பெரியண்ணா' என கத்தியபடியே கண் இருட்டியது தான் நினைவு.....

அதே நினைவு ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றது..தொடர்ந்தும் வலிக்கின்றது..

வலிக்காதா பின்ன? அன்று நான் ஈரம் என உணர்ந்த இரத்ததிற்கு சொந்தக்காரர்கள் நால்வரும் இறந்து இன்றோடு 13 வருடங்கள் அல்லவா ஆகிவிட்டது...



துவிச்சக்கர வண்டி = பைஸிக்கிள்
பதுங்கு குழி = பங்கர்
படம்: நன்றி கானாபிரபா அண்ணா

26 comments:

ஆயில்யன்said...

அப்பாவி மக்களை அடையாளம் கண்டு தாக்கி மனதில் பயத்தினையும் சமூகத்தினை மெல்ல மெல்ல கொல்லும் முடிவுனையும் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்ட இனவெறி அரசுகள்! அனைவரையும் சாகடித்துவிட்டு எதை சாதிக்கப்போகிறார்கள்?

ஆறுதல் சொல்லி தேற்ற வார்த்தைகள் இல்லை சகோதரி! நினைவுகளே வலிமை தரும் சம்பவங்களாக இருக்கட்டும்!

தமிழ் பிரியன்said...

களத்தில் நடப்பதை கேட்டும், வீடியோவில் பார்த்துமே இருக்கும் எங்களுக்கு உங்களது களத்தில் பார்த்த அனுபவம் மனதைக் கனக்க வைக்கிறது... அப்படியானால் களத்தில் இருந்து போராடுபவர்களின் நிலை..... :(

குடுகுடுப்பைsaid...

உங்கள் துயரம் நெஞ்சை அடைக்கிறது.தமிழினம் தன் அறிவை பலப்படுத்தி வல்லமை மிக்க மேலை நாடுகளின்/இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றால்தான் இதற்கு ஒரு விடிவு பிறக்கும்.

kalyan kumarsaid...

அன்புச் சகோதரி. பதுங்குகுழி அனுபவத்தை நேரில் சந்தித்த தங்களின் வேதனையை அப்படியே வெளிப்படுத்தியிருந்தீர்கள். நாங்கள் இங்கே எவ்வளவோ சந்தோஷமாக இருக்க அங்கே தங்களைப் போன்றவர்களின் துயரம் எங்களை வெட்கித்தலைகுனிய வைக்கிறது. தற்போது எங்கே இருக்கிறீர்கள். பணியில் இருக்கிறீர்களா. அறிய அவா. எனது வலைப்பக்கத்திற்கு விஜயம் செய்ய அழைக்கிறேன். kalyanje.blogspot.com
kalyangii@gmail.com
நன்றி
அன்புடன்
கல்யாண்

குட்டிபிசாசுsaid...

அனுபவித்தவர்கள் தான் போரின் வலியை உணரமுடியும் என்றில்லை. மற்றவர்களும் கொஞ்சம் உணர முயற்சி செய்யவேண்டும்.அப்படி முயற்சித்தால் தான் அரைவேக்காட்டுத்தனமான பதில் சொல்லமாட்டார்கள்.

Anonymoussaid...

கண்ணீர் வருகிறது என் கண்களில்...என்ன பாவம் செய்தோம் இந்த நிலையை பெற?

நன்றாக எழுதுகிறீர்கள் சகோதரி.

ரகுநாதன்
தமிழ்நாடு

LOSHANsaid...

உங்கள் துயரம் எங்கள் நெஞ்சை அடைக்க செய்தது.

பூக்குட்டிsaid...

மனம் கனக்க ஒரு பதிவு.

கானா பிரபாsaid...

வணக்கம் தூயா

இப்படியான ஓவ்வொரு வகை வகையான துன்பியல் அனுபவங்களை நம்மவர் சந்தித்தோம், சந்தித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆளுக்காள் ஆறுதல் சொல்வதோடு, சிங்களவனுக்கு கீழே வாழ் என்று ஆலோசனை சொல்லும் புத்திஜீவிகளைப் பார்த்து நகைப்போம்.

செல்லிsaid...

இதே மாதிரியான துயரத்தை பதுங்கு குளி அனுபவத்தை என்னால் இன்னமும் மறக்கமுடியவில்லை.
மனம் சுமையாகிறது

அருள்said...

படிக்கும் போது நெஞ்சு கனக்கிறது....இந்த ஈழ மக்கள் எவ்வளவு காலமாக எப்படியெல்லம் துன்பப்படுறாங்கன்னு நினைக்கும்போதும், படிக்குபோதுமே மனது வலிக்கிறது....அதை நேரில் சந்தித்த உங்களுக்கு எப்படிருக்கும்?...இது போல் இன்னும் வெளிவராத துரங்கள் எவ்வளவோ??...நினைக்க நினைக்க நெஞ்சு கனக்கிறது.........

ஜோசப் பால்ராஜ்said...

இந்த அனுபவங்களைக் கேள்விப்பட்டபின்னரும் சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை மட்டும்தான் கொல்கிறது என சொல்லும் சோமாறிகளை எண்ணி நகைப்பதா, இவ்வளவு வேதனைகளையும் கடந்து என்றாவது சுதந்திர வாழ்வு வாழமாட்டோமா என ஏங்கும் தமிழ் உறவுகளை எண்ணி அழுவதா எனத் தெரியவில்லை.

ஒரு ஹெலிக்காப்டரில் வந்து கூடியிருக்கும் மக்களை சுடும் ராணுவத்தைப் பார்த்து ஆண்மையற்றவர்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது. ரஜினிகாந்த் சொன்னது சரிதான். அதையும் விமர்சித்த சில அறிவு ஜீவிகளை என்ன செய்வது என்று தான் தெரியவில்லை.

Anonymoussaid...

தெய்வமே எம்மைத் தேம்பித் தேம்பி அழவைத்தது போதும் போதும் போதும்.

SKsaid...

:( :(

வேறு எதுவும் சொல்ல தோணவில்லை :(

யாழ்/Yazhsaid...

நினைத்தாலே நடுக்கமாயிருக்கிறது
:(:(:(

Rajeshsaid...

Really sorry :(
Hope God will end this act soon.

கோபிநாத்said...

;-((

T.V.Radhakrishnansaid...

தூயா..

உங்கள் வலிகளை உணர்கிறோம்..
எங்களை அறியாமல் கண்களில் நீர்..
உங்களுக்காக மட்டும் அல்ல
ஈழத்தில் தவித்துக்கொண்டிருக்கும்
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்காகவும்
ஒன்றா..இரண்டா..
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக...
ஏழை சொல் அம்பலம் ஏறாதாம்.._அது
ஐநா சபையாயினும் சரி
எல்லாவற்றிற்கும் ஓர் முடிவுண்டு
கவலை வேண்டாம்
முடிவு நெருங்குகிறது
சிங்களத்திற்கு.

அன்புடன்

காஞ்சனா,ராதாகிருஷ்ணன்

வருங்கால முதல்வர்said...

தூயா..

உங்கள் வலிகளை உணர்கிறோம்..
எங்களை அறியாமல் கண்களில் நீர்..
உங்களுக்காக மட்டும் அல்ல
ஈழத்தில் தவித்துக்கொண்டிருக்கும்
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்காகவும்
ஒன்றா..இரண்டா..
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக...
ஏழை சொல் அம்பலம் ஏறாதாம்.._அது
ஐநா சபையாயினும் சரி
எல்லாவற்றிற்கும் ஓர் முடிவுண்டு
கவலை வேண்டாம்
முடிவு நெருங்குகிறது
சிங்களத்திற்கு.

அன்புடன்

காஞ்சனா,ராதாகிருஷ்ணன்//

இந்த துயரத்தை புரியவைக்க புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் வலிமை உள்ளது.கானா பிரபு, தூயா போன்றோர் வல்லமை பொருந்திய நாடுகளிடம் இந்த துயரத்தின் வலியை அறிவால் சேர்க்கவேண்டும்.

நசரேயன்said...

உங்கள் வரிகளில் இருந்து உங்கள் கஷ்டங்களை எங்களால் நன்கு புரிய முடிகிறது. ஒரு நல்ல விடிவுகாலம் விரைவில் பிறக்கும் என் நம்புவோம்

Jeevansaid...

I can’t even think of healing your pain, sorrow, suffering…. I never seen or known any such cruel moments describe here. Very felt sorry about the lost and miseries your hold on dear. Any mind could not find peace, in destroying similar lives, if they enjoy those are unfit to survive.

தமிழன்...(கறுப்பி...)said...

எத்தனை அனுபவங்கள் எங்களுக்கு...

எப்பொழுது தீருமோ...?!

தமிழன்...(கறுப்பி...)said...

உங்கடை இடம் எதுவெண்டு என்னால சரியா கண்டு பிடிக்க முடியேல்லை...

Anonymoussaid...

:(

:(

சாரதிsaid...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதனை நினைத்துவிட்டால்.....பாரதி...குரலில்..சேலம் சாரதி

சாரதிsaid...

த‌மிழை செம்மொழியாக்கி விட்டு ..த‌மிழ‌னை சாவக்குழிக்கு அனுப்பாதே ..என் பார‌த‌மே