
ஈழத்தை நோக்கிய என் பயணங்களில் மறக்க முடியாதது இறுதியாக நான் என் மண்ணை தொட்டது 2005ஆம் ஆண்டு தான். எப்போதுமே ஆரம்பத்திற்கும் இறுதிக்கும் கிடைக்கும் கவனிப்பு அதிகம் தானே. முதல் பயணம் என்னை நானே அறிய முதல் நடந்தது. இறுதி பயணம் நானே என்னை மறக்கும் அளவிற்கு இன்று வரை கொண்டு சென்றுவிட்டது. பல காரணங்களில் ஒன்றை இப்பகுதியில் பார்க்கலாம்.
என் அப்பப்பாவின் நாட்டு பற்று தான் எங்கள் குடும்பமே தாய் நாட்டை நேசிக்க காரணமாக இருந்தது என்பது என் கருத்து.
வெளிநாடுகளில் வாழ சந்தர்ப்பம் கிடைத்த போதும், வெளிநாட்டு வாழ்க்கை எப்படி என அறிந்த போதும்; “நீங்கெல்லாம் போய்ட்டு வாங்கோ, நான் என் மண்ணை விட்டு வர மாட்டேன்” என சொல்லி, இறுதிவரை தன் வார்த்தையை காப்பாற்றினார்.
ஊரில் இருந்த அப்பப்பா, அப்பாச்சியை பார்ப்பதற்காக தான் எங்களுடைய அதிகமான பயணங்கள் அமையும். இல்லை எனில் எங்கள் குடும்பத்தில் ஒரு உயிர் சிங்கள அரசால் பறிக்கப்பட்டதும் அவசரமாக வரும் தொலைபேசிக்காக அமையும்.
2005 ஆம் ஆண்டு ஊருக்கு சென்ற போது எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. ஒரு மாதம் அப்பப்பாவுடன் நிம்மதியாக இருந்தேன், ஈழத்தில் இருக்கும் பல ஊர்களை சென்று பார்த்தேன், யார் என்றே தெரியாத பல உறவுகளை சந்தித்தேன். அப்படித்தான் அந்த தங்கையையும் சந்தித்தேன்.
எங்கள் ஊரில் இருந்த பகுதி சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் இருந்த காலமது. பாதுகாப்பு காரணத்திற்காக வன்னியை நோக்கி எம்மக்களில் பலர் இடம்பெயர்ந்திருந்தார்கள். அப்படி இடம்பெயர்ந்த உறவுகளை பார்க்கலாம் என வன்னிக்கு குடும்பமாக சென்றிருந்தோம். அப்பப்பாவின் ஏற்பாடு தான்; சொந்தங்கள் விட்டு போக கூடாதாம். அவர்களுடைய காலத்தோடு சொந்தக்காரங்க யார் என்று கேட்கும் நிலை வரக்கூடாதாம்.
அப்படி பல வருடங்களாகவே போரின் நிமித்தம் தொலைந்து போயிருந்த எங்கள் சொந்தக்காரங்க குடும்பம் இருக்கும் இடம் தெரிந்து சென்றிருந்தோம்.
வன்னிக்கு சென்று சற்றே நகர்ப்புறமாக இருக்கும் இடங்களை தாண்டி சென்று ஒரு குடும்பத்தை சந்தித்தோம். பெரிய குடும்பம்…நான் தமிழ் சினிமாவில் மட்டும் பார்த்த ஒரு கூட்டு குடும்பம். நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என ஏங்கிய குடும்பம். ஈழத்தில் நாட்டு பிரச்சனை இல்லை எனில் எங்கள் குடும்பமும் அப்படித்தான் வாழ்ந்திருக்கும். அவர்களுடன் தங்கியிருந்த ஒரு நாள் என் வாழ்வில் மறக்க முடியாது.
அவர்களிடம் மித மிஞ்சி இருந்தது அன்பு மட்டுமே. அன்பை தவிர அவர்களிடம் எதுவுமே அதிகமாக இருக்கவில்லை. உண்மையை சொன்னால், கொஞ்சம் கூட இருக்கவில்லை.
பனையோலையிலும் செம்மண்ணிலும் கட்டிய குடிசைகள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குடிசைகள். ஒரே ஒரு அறையையும், திண்ணைகளையும் மட்டும் கொண்டிருந்தன அக்குடிசைகள். சமையலறை ஒன்று தனியாக அனைவருக்கும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.
ஆண்கள் கூலி வேலை செய்து உழைத்து வருவது அன்றைக்கு மட்டும் அவர்களுக்கு உணவை தந்து கொண்டிருந்தது. வன்னி மண் தெய்வத்திற்கு சமம். அன்னபூரணி..கையால் உதறி விழும் விதை கூட மண்ணில் விழுந்து துளிர்விட்டு விடும். அப்படி பெண்கள் முயற்சியால் வளர்ந்திருந்த காய்கறிகள் தான் உணவாகி வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.
அவர்கள் வீட்டை கண்டுபிடித்து போனதே ஒரு சுவாரசியமான கதை. வீட்டை தேடி கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் வாகனத்தில் சென்றோம். அதன் பின்னர் பனைகள் மட்டுமே இருந்த இடம் ஒன்றிற்கு சென்றுவிட்டோம். நாங்கு திசைகளிலும் பனைமரங்கள். வீதியோ, வீதி பெயர்களோ இருக்கவில்லை. திரும்பி போக வேண்டியது தானா எனக்கும் நினைக்கும் வேளையில் தான் ஒரு சின்ன தங்கை தன் பள்ளி புத்தகங்களோடு வந்து கொண்டிருந்தார்.
எத்தனை நேரம் தான் பெரியவர்களில் கதையை கேட்பது. தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த தங்கையை கண்டதுமே அவரிடம் சென்று இடம் கேட்டேன். அமைதியாக புன்னகைத்து “எங்கட வீட்டை தான் வந்திருக்கியள்” என்று சொன்னார்.
“ஏன் ஆத்தா கொஞ்சம் முன்னாடியே வந்து பெரிசுங்க கதையிலே இருந்து என்னை காப்பாற்ற முடியலையா” என்பதை நான் என் மனதிற்குள் கேட்டதோடு நிறுத்திவிட்டேன். அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது.
அந்த பனம்காட்டில் ஒரு சின்ன பெண் பள்ளிப்புத்தகங்களோடு நடந்து வருகின்றாரே! இதை தான் எங்கப்பா “படிக்கிற பிள்ளை எங்கையிருந்தாலும் படிக்கும். படிக்காததுகள் ஒஸ்திரேலியாவில இருந்தாலும் படிக்காதுகள்” என்பாரே!
எங்கள் வீடு தான் என சொன்னவுடன், சரி எங்களுடன் வாகனத்தில் வாங்கோவன் என நாங்கள் கேட்டும் வாகனத்தில் ஏறவேயில்லை. என்ன தான் நாம் உறவென்று சொன்னாலும், புதியவர்கள் தானே.
“சரி நான் உங்களோட நடந்து வாறன். மற்றவையள் பின்னால காரில வரட்டும்” என சொல்லி தங்கையோடு நடந்தே அவர்கள் வீட்டிற்கு சென்ற அனுபவம் எனக்குண்டு.
அப்படி நடக்கும் போது தான் அவருக்கு படிப்பில் இருந்த ஆர்வத்தை அறிந்து கொண்டேன். தினமும் 1½ மணித்தியாலங்கள் நடந்து சென்று படிப்பதை அறிந்த போது எனக்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பின்னர் அவர்கள் வீட்டை அடைந்து, அவர்கள் வறுமையை பார்த்த பின்னர் அந்த ஆச்சர்யம் அதிகமாகிக் கொண்டே போனது.
அவர்கள் வீட்டை அடைந்த போது, எங்களுக்கு பெரிய வரவேற்று கிடைத்தது. அத்தனை அன்பான மனிதர்களை நான் வன்னியில் மட்டுமே கண்டுள்ளேன்.
உடனடியாக மண்ணில் இருந்து எடுத்த மரவள்ளிக்கிழங்கை இடித்து தந்தார்கள். சுடசுட தேத்தண்ணி போட்டு தந்தார்கள். இரவும் தங்கி செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்களின் நிலை எங்களை மாட்டோம் என சொல்ல வைத்துவிட்டது. அங்கு தங்கலாம் என மனம் சொல்ல, வேண்டாம் என புத்தி சொல்ல…..”அடுத்த முறை கட்டாயம் நிற்பம்” என்ற உறுதியோடு திரும்ப ஆயத்தமானோம்.
“யோசிக்காம படியுங்கோ. அம்மாட்ட எங்கட அட்ரஸ் குடுத்திருக்கம். என்னென்டாலும் கதையுங்கோ” என கூறி வாகனத்தில் ஏறி கையசைத்தேன். ஆரம்பத்தில் இருந்த அதே புன்னகையுடன் “போய்ட்டு வாங்கோக்கா” என கூறி வழி அனுப்பினார் அந்த தங்கை.
அன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு ஒரு பெரிய இடியாக இருந்தது அந்த செய்தி..
“ஆகஸ்ட் 14, 2006 - இலங்கை விமானப்படையின் திட்டமிட்ட துல்லியமான செஞ்சோலை சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.போ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.”
‘அய்யோ’ என நாம் அனைவரும் அலறிய நேரத்தில் தான் கொல்லப்பட்ட சில மாணவிகளின் படங்கள் வெளியிட ஆரம்பித்திருந்தார்கள். முதலாவது முறையாக வந்த படங்களை பார்த்த போது எனக்கு மூச்சு ஒரு தடவை நின்றது போல் ஒரு உணர்வு. படங்களில் சிரித்து கொண்டிருந்த அந்த பிஞ்சுகளில் ஒருத்தியாக அந்த தங்கை………!
படிக்க வேண்டும் என தினமும் 11/2 மணித்தியாலங்கள் நடந்த பிள்ளையை கொன்றதும் போதாது என, ‘நாம் அழித்தது புலிகள்’ என இராணுவம் சொல்ல. ‘அப்படித்தான் இருக்கும்’ என சில புல்லருவிகள் ஆமாம் போட…
அய்யோ நீங்கள் அழித்தது ஒரு பிஞ்சை….ஒன்றுமறியா ஒரு குழந்தையை….அமைதியான புன்னகைக்கு சொந்தக்காரியையடா கொலைகாரர்களே….
பல வருடங்களுக்கு பின்னர் நான் தேடி கண்டுபிடித்த என் சொந்ததை அழித்துவிட்டீர்களே பாவிகளே..
என் தங்கையுடன் பலியான அனைத்து குழந்தைகளுக்கும் இப்பத்திவை சமர்ப்பிக்கின்றேன்.
தூயா
படம் நன்றி: தமிழ்.நெற்
நானும் என் ஈழமும் 15: செஞ்சோலை படுகொலையில் என் தங்கை ஒருத்தி
Subscribe to:
Post Comments (Atom)


25 comments:
இந்த அஞ்சலிப் பதிவில் நானும் மனம் கனக்க கலந்துக்கறேன்.
//வந்த படங்களை பார்த்த போது எனக்கு மூச்சு ஒரு தடவை நின்றது போல் ஒரு உணர்வு. படங்களில் சிரித்து கொண்டிருந்த அந்த பிஞ்சுகளில் ஒருத்தியாக அந்த தங்கை………!//
படித்து முடித்தப்போது பதற்றம் பரவியது!
எத்தனை அப்பாவி சிறுமிகள் அவர்கள் செய்த தவறுதான் என்ன? அநியாயமாக பலி கொண்ட இனவாத அரசு இன்றும் கூட அதை பற்றி வருந்தவும் இல்லை! உலகநாடுகளின் கண்டனங்களும் பெரிதாய் எதையும் செய்துவிடவில்லையே :(((
இதயெல்லாம் பார்த்தபின்னரும் இலங்கை அரசுக்கு உதவ எப்படி மனம் வருகின்றது எனத் தெரியவில்லை?
இன்னமும் தமிழ் மக்களின் சோகத்தை புரிந்துகொள்ளாத தமிழர்களையே என்ன செய்வது? இலங்கைக்கு ஆயுதமும், அனைத்து உதவிகளையும் வழங்கும் இந்தியா, பாகிஸ்தான், சீனா அரசுகளை என்ன செய்வது?
நெஞ்சைக் கனக்க செய்து விட்டது..:(
கண்ணும் மனசும் ரொம்பவே கலங்கி போச்சு நண்பா!
இந்த வேதனை துயரம் எப்போது நீங்குமோ?
http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html
உண்மையில் கண்ணீர்விட வைத்தது அந்தச் சிறுமியின் அகால மரணம். ஒரு ஆலோசனை: உங்களின் நானும் என் ஈழமும் தொடரினை ஒரு புத்தகமாகக் கொண்டுவாருங்கள். அனைத்தும் உண்மைச்சம்பவங்கள் என்பதால் அதற்கு ஒரு கணமிருக்கும். வலைப்பக்க நேயர்கள் மட்டுமின்றி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கைகளில் அந்த அவலக் கதைகள் கிடைக்க வேண்டும் என்பதே என் அவா. புத்தகத்தின் தலைப்பு இப்படி இருக்கலாம் என என் எண்ணம்:
''ஈழ மண்ணின் ஈரக் கதைகள்''.
உண்மையில் இது ஒரு பதிவு செய்யப்பட வேண்டிய விஷயம். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். என்னால் ஆன உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன். - கல்யாண்குமார் www.kalyanje.blogspot.com
தங்களை புத்தக தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.மறக்காம எழுதிடுங்க
செஞ்சோலைப்படுகொலையில் கருக்கப்பட்ட குருத்துக்களின் நினைவுகளை மட்டுமே நெஞ்சுகளில் சுமக்கும்படியான சோகம் இதயத்தில் கனக்கிறது தூயா.
- சாந்தி -
செஞ்சோலைப்படுகொலையில் கருக்கப்பட்ட குருத்துக்களின் நினைவுகளை மட்டுமே நெஞ்சுகளில் சுமக்கும்படியான சோகம் இதயத்தில் கனக்கிறது தூயா.
- சாந்தி -
வேதனையான பதிவு.
சிங்களவனுக்கும் அவனுக்கு கால் அமுக்கி விடுபவர்களுக்கும் விரைவில் பாடம் புகட்டப்படும்.
:(( வருத்தமாக இருக்கிறது...
பதிவின் தலைப்பைப் பார்த்ததும் இங்கு வரக்கூடாது என நினைத்திருந்தேன். ஆனாலும் "தங்கை ஒருத்தி" என்ற பதம் என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது.
செஞ்சோலைத்தாக்குதலை என்றுமே என்னால் மறந்துவிட முடியாது. தாக்குதல் நடந்தநாள் மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் நான் தான் எழுதினேன். அதிக மழைபெய்தாலே தாங்க முடியாத பிஞ்சுகள் குண்டு மழையை எப்படித்தாங்கும்?
அந்தப் பரிதாபம், இழப்பு, வேதனை எல்லாவற்றையும் வார்த்தையாக்கியதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் மாநாட்டில் கெகலிய ரம்புக்வெல்ல (பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்) எப்படிச்சொன்னார் தெரியுமா?
விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ படங்களைக் காட்டி இதுதான் செஞ்சோலை,புலிகள் பயிற்சியளிக்கிறார்கள், இதனை எமது விமானி முழுமையா அறிந்துகொண்டுதான் குண்டு வீசியிருக்கிறார். நாம் கொன்றது புலிக்குட்டிகளையேயன்றி அப்பாவிக் குழந்தைகளையல்ல என்று நா கூசாமல் கூறினார்.
இதுதான் நாட்டின் நிலைமை தூயா.
என்னவென்றாலும் இந்தப் பதிவுக்கு நான் முழுமையான எதிர்ப்புதான்.
நீண்ட நாட்களாக படிக்க எண்ணி தற்போது தான் முதல் முறையாக தங்களது பதிவை படிக்க இயன்றது. துயரமான பதிவு :-(
இப்பதிவைப் படித்தபின் ஒன்றுமே செய்ய இயலாமல் மனம் கனத்து அப்ப்டியே சிலையாகிவிட்டேன்.
அரக்கர்களே.
அங்கே செத்து மடிய,
இங்கே அரசியல் கூத்தடிக்கிறார்கள்.
உண்ணாவிரதம் முடித்து பழரசம் குடிக்கும் அத்தனை பேரையும் பார்த்தால் கொலைவெறி வருகிறது.
சே.
//
என்னவென்றாலும் இந்தப் பதிவுக்கு நான் முழுமையான எதிர்ப்புதான்.
//
இது மட்டும் புரியவேயில்லை..
:(( எனது ஆழ்ந்த வருத்தங்கள்.
Thooya said...
//
என்னவென்றாலும் இந்தப் பதிவுக்கு நான் முழுமையான எதிர்ப்புதான்.
//
இது மட்டும் புரியவேயில்லை..
//
மனதுக்குக் கவலையான எதையுமே நான் அடிக்கடி மீட்டுப்பார்ப்பதில்லை தூயா. அப்படியொருச் சம்பவம் தான் செஞ்சோலை. நீங்கள் அதனை நினைவூட்டினீர்கள். அதனால் தான் அப்படி எழுதியிருந்தேன்.
//
மனதுக்குக் கவலையான எதையுமே நான் அடிக்கடி மீட்டுப்பார்ப்பதில்லை தூயா. அப்படியொருச் சம்பவம் தான் செஞ்சோலை. நீங்கள் அதனை நினைவூட்டினீர்கள். அதனால் தான் அப்படி எழுதியிருந்தேன்.
//
ஓ...நான் என்ன எதுவோ என நினைத்தேன்.. எனக்கும் கஸ்டமாக இருந்தது. அதனால் தான் வருடமாக எழுதவில்லை. அன்று சில புகைப்படங்களை பார்த்த போது...எழுத மனது சொன்னதால் உடனே எழுதினேன்.
தமிழ் மக்களின் மனதில், மாறாத வடுக்களில் இதுவும் ஒன்று .
:(
கருத்துக்களையும், தம் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட:
ராமலக்ஷ்மி
ஆயில்யன்
ஜோண்ணா
தமிழ்பிரியன்
ஜுர்கேன் க்ருகேர்
ஜோதிபாரதி
கல்யாண்குமார்
அத்திரி
tamil24.blogspot.com
இரவி சங்கர்
விக்கி
இறக்குவானை நிர்ஷன்
அகிலா
அமிர்தவர்ஷினி அம்மா
அமுதா
.:Honey Tamil:.
&
சேர்வேசன்; ஆகியோருக்கு நன்றிகள்.
ரொம்ப வலிநிறைந்தா வார்த்தைகள். உங்களின் பதிவு தரும் வலியோடு என்னால் இந்தப் படங்களையும் பார்க்க முடியவில்லை....
நான் 2006 இல் இங்கு சென்று வந்தேன்... நீங்கள் எழுதி நீண்ட நாளின் பின்னர் மீண்டும் ஒரு முறை இந்த பதிவை வாசித்து கலங்கிய மனதுடன்.இன்றைய பொழுதில் இனணையத்துடன் தொடர்பை துண்டிக்கிறேன்
ரெம்ப கஷ்டமாக இருக்கு
neenda natkalukku piraguthan intha newsai net moolam padithen.poraligalai mutrilum ozhithu vitom endru mar thattik kollum srilanka arasum india arasum intha padukolaigalukku enna karanam solla pogirargal? srilankavil ramayana kalathil mattum illai,ippothum arakkargal vazhnthu konduthan irkkirargal.
Post a Comment